திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஆதியோகி

முதல் மரக்கன்றை சத்குரு நட்டு பசுமை நாகர்கோவில் இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் நடந்த சத்சங்கம் நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு மனிதன் மலையடிவாரத்தில் அமர்ந்து தியானம் செய்தார். பல மாதங்கள் அப்படியே அமர்ந்து இருந்ததால் அவரை ஆதியோகி என மக்கள் அழைத்தனர். அவர் என்ன செய்கிறார் என காண்பதற்கு ஏராளமான மக்கள் கூடி அவர் முன் அமர்ந்து இருந்தனர். காலம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கலைந்து சென்றனர். 84 ஆண்டுகளுக்கு பின் சூரிய ஓட்டம் உத்திராயணத்திற்கு மாறும் அன்று ஆதியோகி கண் திறந்து பார்த்தார். அப்போது 7 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள்தான் சப்தரிஷிகள். மனிதர்கள் இப்போது எந்த பரிணாமத்தில் இருந்தாலும் அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. அவர்கள் மற்றொரு பரிணாமத்திற்கு மாற விரும்புகிறார்கள். அவருக்காக காத்திருந்த சப்தரிஷிகளும் அவ்வாறு விரும்பினர். எனவே அவர்களுக்கு அடுத்த பரிணாமத்திற்கு போகும் நான்கு யுக்திகளை உருவாக்கி கற்றுகொடுத்தார். பல ஆண்டுகள் பயிற்சிக்கு பின் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் கற்றதை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் அனுப்பினார். இவ்வாறு தென் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்தான் அகஸ்தியமுனிவர். இது மதம் பிறக்கும் முன்பே நடந்தது. நீங்கள் உங்கள் வீட்டிலேயே உங்களுக்கு தெரியாமல் பல ஆசனங்களை செய்கிறீர்கள். எல்லாவற்றிலும் ஒரு ஆசனம், ஒரு முத்திரை இருக்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் செய்கிறோம். எனவே நாம் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். விழிப்புடன் செய்தால் அதன் பலனை முழுமையாக அடையமுடியும். யோகாவை விழிப்புடன் செய்ய வேண்டும் என்பதற்காக ஆனந்த அலை என தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்கு முன் ஆன்மீகம்: நம் நாட்டில் வாழ்க்கை பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்கிறது. ஏழைகளாக இருக்கிறவர்கள் பொருளாதாரத்தில் வளர வேண்டும் என இருக்கிறார்கள். கடந்த தீபாவளி தினத்தில் தமிழகத்தில் 26 கோடி ரூபாய்க்கு சாராயம் விற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். திருப்பூர் நகரில் மட்டும் 17 கோடி ரூபாய்க்கு சாராயம் விற்றுள்ளது. தமிழகத்தில் திருப்பூர் பொருளாதாரத்தில் வளர்ந்த பகுதி. பொருளாதாரத்தில் வளர்ந்தால் அனைவரும் சாராயம் குடிக்க போய் விடுகிறார்கள். மேலும் அடுத்த 6 ஆண்டுகளில் 30 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் வந்து விடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதாரம் வளர்ந்தாலும் வாழ்க்கை வளம் பெறவில்லை. இதன்மூலம் ஏதாவது ஒரு வழியில் நாம் ஏமாற்றப்படுகிறோம். இந்த ஏமாற்றத்தை தடுக்க வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சிக்கு முன் ஆன்மீக வளர்ச்சி வரவேண்டும். இந்த பிரபஞ்சத்தில் மேல் எது, கீழ் எது என யாருக்கும் தெரியாது. முன்னால் எது பின்னால் எது என்பதும் தெரியாது. ஆனால் உள்ளம் எது வெளியே எது என்பது மட்டும் உறுதியாக சொல்ல முடியும். நான் இருப்பது உங்கள் கண்களுக்குள் தெரிகிறது. அதைப்போல் நான் பேசுவது உங்கள் காதுகளுக்குள் கேட்கிறது. எனவே நான் உங்களுக்குள் இருக்கிறேன். அனைத்து இன்ப, துன்பங்களும் உங்களுக்குள் நடக்கிறது. உங்கள் உள்ளத்திற்குள் எப்படி உணர்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு தெரியும். எல்லாமே நமக்குள் நடக்கும் போது நான் நினைத்த எல்லாமே நடக்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. நாம் நினைப்பது போல் யாருமே நடப்பதில்லை. நாம் நினைப்பதில் யாராவது 50 சதவீதம் நடந்தாலே அது வெற்றிதான். ஆனால் அது பிரச்னை இல்லை. பிரச்னை என்பது நம் உள்ளம்தான். ஒரு சாதாரண செல்போனில் இருக்கும் தொழில்நுட்பத்தில் 7 சதவீதத்தை மட்டுமே மக்கள் பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். எனவே செல்போனில் இருக்கும் 90 சதவீதம் தொழில்நுட்பத்தை நீக்கிவிடலாம் என செல்போன் நிறுவனங்கள் நினைத்துள்ளன. செல்போனிலேயே சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றால் கார், விமானம் போன்ற இயந்திரங்களின் தொழில்நுட்பத்தில் மிக குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது. அந்த தொழில்நுட்பங்களை உருவாக்கிய நம் உள்ளம் என்ற இயந்திரம்தானே. ஆனால் நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கம் சாப்பிடுவது, தூங்குவது, இனப்பெருக்கம் செய்வது, இறப்பது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நாம் நினைப்பதை புழு பூச்சிகளுடன் ஒப்பிட முடியாது. சில வகை புழுக்கள் தனது உடல் எடையில் 50 மடங்கு எடை கொண்ட உணவை உண்கின்றன. சில புழுக்கள் பல ஆண்டுகள் தூங்குகின்றன. எனவே நம்மால் சிறு புழு பூச்சிகளுடன் கூட போட்டியிட முடியாது. நாம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் மூன்று மணிநேரத்திற்குள் அந்த வாழைப்பழம் நமது உடலில் ஜீரணமாகி மனிதனாக மாறிவிடுகிறது. ஒரு வாழைப்பழத்தை மனிதனாக்கும் சக்தி நமக்குள் இருக்கிறது. எல்லாம் எந்த ஒரு விஞ்ஞானியாலும் ஒரு இலையையோ, ஒரு அணுவையோ உருவாக்க முடியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் உருவாக்கும் வல்லமை உங்களுக்குள் இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் திறமையை கல்வியால், தொழில்நுட்பத்தால் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு விழிப்புணர்வு வேண்டும். ஆன்மீகவாதி என்றால் அரைகுறை ஆடையுடன், சரியாக சாப்பிடாமல் இருப்பவர்கள் என நினைக்கிறார்கள். ஆன்மீகம் என்றால் சாப்பிடத்தெரியாதவர்கள், உடை அணியத்தெரியாதவர்கள் கடைபிடிப்பது என அடையாளப்படுத்திவிட்டார்கள். ஆன்மீகம் என்பது புதுதிறமை. இப்போது உள்ள ஆன்மீக வாதிகள் அதை திறமை இல்லாதவர்கள் கடைபிடிப்பது என மாற்றிவிட்டார்கள். நான் சிறு வயதில் கோயிலுக்கு செல்வதில்லை. எனது பாட்டியிடம் கோயில் என்றால் என்ன என கேட்டேன். அவர் கொடுத்த பதில் நான் என்ற எண்ணத்தை விட்ட இடம் கோயில் என கூறினார். அதன்பின்னர் கோயில் இருக்கும் இடத்தை தேடினேன். கடந்த 20 ஆண்டுகளாக ஈஷா யோகா கலையை ரெம்ப மென்மையாக, ரொம்ப கடினமாக கற்றுகொடுத்து வருகிறோம். கடந்த காலங்களில் ஆன்மீக வாதி என்றால் அவர் யார் என விசாரிக்காமல் அவரை உபசரித்து மரியாதையுடன் நடத்தினர். இப்போதுள்ள ஆன்மீக வாதிகள் ஆன்மீகம் என்றால் அசிங்கம் என நினைக்கும் அளவிற்கு மாற்றிவிட்டார்கள். அதை மாற்ற முயற்சி செய்கிறோம். யோகா மூலம் பஞ்சபூதங்களை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த 5 பூதங்களால்தான் மனமும், உடலும் செயல்படுகிறது. பஞ்சபூதங்களை நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் எந்த ரசாயண மாற்றமும் செய்யாமல் மூலக்கூறு கட்டமைப்பு மூலம் சுவையை மாற்ற முடியும் என விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் தண்ணீரை குடிக்க கொடுத்து ஒருவரை இறக்கவைக்கவும் முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது உடலில் 72 சதவீதம் தண்ணீர், 12 சதவீதம் நிலம், 6 சதவீதம் காற்று, 4 சதவீதம் காற்று, 2 சதவீதம் நெருப்பு, 4 சதவீதம் ஆகாயம் இருக்கிறது. ஒரு டம்ளரில் இருக்கும் தண்ணீரை நம்மால் மாற்ற முடியும் என்றால் நம் உடலில் இருக்கும் 72 சதவீதம் தண்ணீரை பஞ்சபூத சுத்திகரிப்பு மூலம் மாற்றி நமது சக்தியை அதிகரிக்க முடியும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் 1 துளியாவது ஆன்மீகம் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு சத்குரு பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக