திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஆதியோகி

முதல் மரக்கன்றை சத்குரு நட்டு பசுமை நாகர்கோவில் இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் நடந்த சத்சங்கம் நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு மனிதன் மலையடிவாரத்தில் அமர்ந்து தியானம் செய்தார். பல மாதங்கள் அப்படியே அமர்ந்து இருந்ததால் அவரை ஆதியோகி என மக்கள் அழைத்தனர். அவர் என்ன செய்கிறார் என காண்பதற்கு ஏராளமான மக்கள் கூடி அவர் முன் அமர்ந்து இருந்தனர். காலம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கலைந்து சென்றனர். 84 ஆண்டுகளுக்கு பின் சூரிய ஓட்டம் உத்திராயணத்திற்கு மாறும் அன்று ஆதியோகி கண் திறந்து பார்த்தார். அப்போது 7 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள்தான் சப்தரிஷிகள். மனிதர்கள் இப்போது எந்த பரிணாமத்தில் இருந்தாலும் அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. அவர்கள் மற்றொரு பரிணாமத்திற்கு மாற விரும்புகிறார்கள். அவருக்காக காத்திருந்த சப்தரிஷிகளும் அவ்வாறு விரும்பினர். எனவே அவர்களுக்கு அடுத்த பரிணாமத்திற்கு போகும் நான்கு யுக்திகளை உருவாக்கி கற்றுகொடுத்தார். பல ஆண்டுகள் பயிற்சிக்கு பின் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் கற்றதை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் அனுப்பினார். இவ்வாறு தென் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்தான் அகஸ்தியமுனிவர். இது மதம் பிறக்கும் முன்பே நடந்தது. நீங்கள் உங்கள் வீட்டிலேயே உங்களுக்கு தெரியாமல் பல ஆசனங்களை செய்கிறீர்கள். எல்லாவற்றிலும் ஒரு ஆசனம், ஒரு முத்திரை இருக்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் செய்கிறோம். எனவே நாம் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். விழிப்புடன் செய்தால் அதன் பலனை முழுமையாக அடையமுடியும். யோகாவை விழிப்புடன் செய்ய வேண்டும் என்பதற்காக ஆனந்த அலை என தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்கு முன் ஆன்மீகம்: நம் நாட்டில் வாழ்க்கை பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்கிறது. ஏழைகளாக இருக்கிறவர்கள் பொருளாதாரத்தில் வளர வேண்டும் என இருக்கிறார்கள். கடந்த தீபாவளி தினத்தில் தமிழகத்தில் 26 கோடி ரூபாய்க்கு சாராயம் விற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். திருப்பூர் நகரில் மட்டும் 17 கோடி ரூபாய்க்கு சாராயம் விற்றுள்ளது. தமிழகத்தில் திருப்பூர் பொருளாதாரத்தில் வளர்ந்த பகுதி. பொருளாதாரத்தில் வளர்ந்தால் அனைவரும் சாராயம் குடிக்க போய் விடுகிறார்கள். மேலும் அடுத்த 6 ஆண்டுகளில் 30 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் வந்து விடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதாரம் வளர்ந்தாலும் வாழ்க்கை வளம் பெறவில்லை. இதன்மூலம் ஏதாவது ஒரு வழியில் நாம் ஏமாற்றப்படுகிறோம். இந்த ஏமாற்றத்தை தடுக்க வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சிக்கு முன் ஆன்மீக வளர்ச்சி வரவேண்டும். இந்த பிரபஞ்சத்தில் மேல் எது, கீழ் எது என யாருக்கும் தெரியாது. முன்னால் எது பின்னால் எது என்பதும் தெரியாது. ஆனால் உள்ளம் எது வெளியே எது என்பது மட்டும் உறுதியாக சொல்ல முடியும். நான் இருப்பது உங்கள் கண்களுக்குள் தெரிகிறது. அதைப்போல் நான் பேசுவது உங்கள் காதுகளுக்குள் கேட்கிறது. எனவே நான் உங்களுக்குள் இருக்கிறேன். அனைத்து இன்ப, துன்பங்களும் உங்களுக்குள் நடக்கிறது. உங்கள் உள்ளத்திற்குள் எப்படி உணர்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு தெரியும். எல்லாமே நமக்குள் நடக்கும் போது நான் நினைத்த எல்லாமே நடக்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. நாம் நினைப்பது போல் யாருமே நடப்பதில்லை. நாம் நினைப்பதில் யாராவது 50 சதவீதம் நடந்தாலே அது வெற்றிதான். ஆனால் அது பிரச்னை இல்லை. பிரச்னை என்பது நம் உள்ளம்தான். ஒரு சாதாரண செல்போனில் இருக்கும் தொழில்நுட்பத்தில் 7 சதவீதத்தை மட்டுமே மக்கள் பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். எனவே செல்போனில் இருக்கும் 90 சதவீதம் தொழில்நுட்பத்தை நீக்கிவிடலாம் என செல்போன் நிறுவனங்கள் நினைத்துள்ளன. செல்போனிலேயே சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றால் கார், விமானம் போன்ற இயந்திரங்களின் தொழில்நுட்பத்தில் மிக குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது. அந்த தொழில்நுட்பங்களை உருவாக்கிய நம் உள்ளம் என்ற இயந்திரம்தானே. ஆனால் நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கம் சாப்பிடுவது, தூங்குவது, இனப்பெருக்கம் செய்வது, இறப்பது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நாம் நினைப்பதை புழு பூச்சிகளுடன் ஒப்பிட முடியாது. சில வகை புழுக்கள் தனது உடல் எடையில் 50 மடங்கு எடை கொண்ட உணவை உண்கின்றன. சில புழுக்கள் பல ஆண்டுகள் தூங்குகின்றன. எனவே நம்மால் சிறு புழு பூச்சிகளுடன் கூட போட்டியிட முடியாது. நாம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் மூன்று மணிநேரத்திற்குள் அந்த வாழைப்பழம் நமது உடலில் ஜீரணமாகி மனிதனாக மாறிவிடுகிறது. ஒரு வாழைப்பழத்தை மனிதனாக்கும் சக்தி நமக்குள் இருக்கிறது. எல்லாம் எந்த ஒரு விஞ்ஞானியாலும் ஒரு இலையையோ, ஒரு அணுவையோ உருவாக்க முடியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் உருவாக்கும் வல்லமை உங்களுக்குள் இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் திறமையை கல்வியால், தொழில்நுட்பத்தால் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு விழிப்புணர்வு வேண்டும். ஆன்மீகவாதி என்றால் அரைகுறை ஆடையுடன், சரியாக சாப்பிடாமல் இருப்பவர்கள் என நினைக்கிறார்கள். ஆன்மீகம் என்றால் சாப்பிடத்தெரியாதவர்கள், உடை அணியத்தெரியாதவர்கள் கடைபிடிப்பது என அடையாளப்படுத்திவிட்டார்கள். ஆன்மீகம் என்பது புதுதிறமை. இப்போது உள்ள ஆன்மீக வாதிகள் அதை திறமை இல்லாதவர்கள் கடைபிடிப்பது என மாற்றிவிட்டார்கள். நான் சிறு வயதில் கோயிலுக்கு செல்வதில்லை. எனது பாட்டியிடம் கோயில் என்றால் என்ன என கேட்டேன். அவர் கொடுத்த பதில் நான் என்ற எண்ணத்தை விட்ட இடம் கோயில் என கூறினார். அதன்பின்னர் கோயில் இருக்கும் இடத்தை தேடினேன். கடந்த 20 ஆண்டுகளாக ஈஷா யோகா கலையை ரெம்ப மென்மையாக, ரொம்ப கடினமாக கற்றுகொடுத்து வருகிறோம். கடந்த காலங்களில் ஆன்மீக வாதி என்றால் அவர் யார் என விசாரிக்காமல் அவரை உபசரித்து மரியாதையுடன் நடத்தினர். இப்போதுள்ள ஆன்மீக வாதிகள் ஆன்மீகம் என்றால் அசிங்கம் என நினைக்கும் அளவிற்கு மாற்றிவிட்டார்கள். அதை மாற்ற முயற்சி செய்கிறோம். யோகா மூலம் பஞ்சபூதங்களை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த 5 பூதங்களால்தான் மனமும், உடலும் செயல்படுகிறது. பஞ்சபூதங்களை நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் எந்த ரசாயண மாற்றமும் செய்யாமல் மூலக்கூறு கட்டமைப்பு மூலம் சுவையை மாற்ற முடியும் என விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் தண்ணீரை குடிக்க கொடுத்து ஒருவரை இறக்கவைக்கவும் முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது உடலில் 72 சதவீதம் தண்ணீர், 12 சதவீதம் நிலம், 6 சதவீதம் காற்று, 4 சதவீதம் காற்று, 2 சதவீதம் நெருப்பு, 4 சதவீதம் ஆகாயம் இருக்கிறது. ஒரு டம்ளரில் இருக்கும் தண்ணீரை நம்மால் மாற்ற முடியும் என்றால் நம் உடலில் இருக்கும் 72 சதவீதம் தண்ணீரை பஞ்சபூத சுத்திகரிப்பு மூலம் மாற்றி நமது சக்தியை அதிகரிக்க முடியும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் 1 துளியாவது ஆன்மீகம் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு சத்குரு பேசினார்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள்

மாவீரன் அலெக்சாண்டர் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டு, தன் நாடு
திரும்பும் வழியில் உடல் சுகவீனப் பட்டு படுக்கையில் கிடந்தார். மரணம்
தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அவர், தான் பெற்ற வெற்றி, தன்னுடைய பெரிய போர்ப்படை, வீர வாள், திரண்ட செல்வம் எல்லாம் வீணாகிப் போவதை அறிந்தார்.

தன்னுடைய படைத் தளபதியை அழைத்த அவர், "எப்படியும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன். என்னுடைய மூன்று விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.  கண்ணீர் வழிய நின்ற தளபதியும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

"என்னுடைய முதல் ஆசை, என்னுடைய சவப்பெட்டியை என்னுடைய மருத்துவர்களே தூக்கி செல்ல வேண்டும்.இரண்டாவதாக, என்னுடைய இறுதிப் பயணத்தின்போது, கல்லறை வரை வழியெங்கும் நான் சம்பாதித்த தங்க, வைர, வைடூரிய பொருட்களை இறைத்தபடி செல்ல வேண்டும்.  மூன்றாவதாக, சவப் பெட்டிக்குள் என்னை வைக்கும்போது, என் இரண்டு கைகளையும் வெளியில் தெரியும்படி வைக்க வேண்டும்" என்றார்.

கூடி இருந்த மக்களெல்லாம் இந்த வித்தியாசமான வேண்டுகோள்களைக் கேட்டு வியந்தனர். ஆனால் ஒருவரும் அவரைக் கேட்க தயங்கினர்.  அலெக்ஸாண்டருடைய  நம்பிக்கைக்குரிய படைத் தலைவர் மட்டும் அவரை நெருங்கி அவர் கையை  முத்தமிட்டு, அவரிடம், "மன்னர் அவர்களே, உங்கள் ஆசையை நிச்சயம் பூர்த்தி செய்வோம்.  ஆனால், இந்த ஆசைக்கான காரணம் மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றார்.

ஒரு நீண்ட மூச்சு விட்டபின், அலெக்ஸாண்டர் சொன்னார், "மூன்று விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  முதலாவதாக, மருத்துவர்களால் போகும் உயிரை நிறுத்த முடியாது, என்பதை உணர்த்தவே, என்னுடைய சவப்பெட்டியை  அவர்களை விட்டு எடுத்து செல்ல விரும்புகிறேன்.  இதன் மூலம் மக்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

"ஒரு மனிதன் இறந்து போகும்போது, தான் சம்பாதித்த சிறு துரும்பைக் கூட
எடுத்துச் செல்ல முடியாது, எனவே, பணம், பொருள் மீது ஆசை கொண்டு அலைவதை  மக்கள் நிறுத்த வேண்டும்.  இதை வலியுறுத்தும் விதமாகத்தான், என்  சவப்பெட்டி செல்லும் வழி எங்கும் தங்க, வைர பொருட்களை இறைத்துச்
செல்லவேண்டும் என்று இரண்டாவது ஆசையை தெரிவித்தேன்.

"நான் பிறக்கும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை, இறந்தபிறகும் என்னோடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்த உலகத்துக்கு தெரிவிக்கவே, என் இரண்டு கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியே தெரியுமாறு வைக்க மூன்றாவது ஆசையை வெளியிட்டேன்".

அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள் : "நான் இறந்தபிறகு, என்னைப்
புதையுங்கள், எந்த நினைவுச் சின்னமும் வேண்டாம்.  என்னுடைய இரண்டு
கைகளையும் சவப்பெட்டியின் வெளியே தெரியுமாறு செய்யுங்கள்; இந்த உலகத்தையே  வென்ற ஒருவன், மரணத்திற்கு பிறகு தன்னுடன் ஒன்றும் கொண்டு செல்லவில்லை  என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும்."

வள்ளுவன்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!





னை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

விவேக்கானந்தர்


மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு
இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம்
மாறாத நிஜ சாமி!


நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார்.
நண்பர்களுக்கு 'குட்டிப் பிசாசு'. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர்
'பயில்வான் சாமி'. அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு 'விவேகானந்தர்' என்ற
பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது!


கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத
தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால்
ஐ.சி.எஸ்., ஆக்குவதாக மாமனார் சொன்னார். 'என்னோடு இருந்துவிடேன்' என்று
ராமகிருஷ்ணர்அழைத்தார். குருநாதர் ஆசைதான்கடைசியில் நிறைவேறியது!


'புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்தத் தத்துவத்தையும்
ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும்
ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொன்ன ஒரே சாமியார் இவர்தான்!


விவேகானந்தருக்கு ஞானத் தாயாக இருந்தவர் அம்மா புவனேஸ்வரி. 'எனக்கு ஞானம்
ஏதாவது இருக்குமாயின் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டு
இருக்கிறேன்' என்று சொல்லியிருக் கிறார்!


சிலம்பு, மல்யுத்தம், நீச்சல், படகு ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை இளம் வயதிலேயே
எடுத்துக்கொண் டவர். 'உடலைப் பலமாகவைத்துக் கொண்டால்தான் உள்ளம் பலமாகும்'
என்பது அவரது போதனை!


'கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?' -யாரைப் பார்த்தாலும் நரேந்திரன் கேட்கும்
ஒரே கேள்வி இதுதான். 'பார்த்திருக்கிறேன்... உனக்கும் காட்டுகிறேன்'
என்றுசொன்னவர் ராமகிருஷ்ணர் மட்டுமே!


புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அடியில் தியானம் செய்ய ஆசைப்பட்டுத் தனது
நண்பர்களுடன் சென்றார். புத்தகயாவில் தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்!


விவேகானந்தர் நிறைய பாடல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். நினைத்த
மாத்திரத்தில் அதை அப்படியே சொல்லும் ஆற்றலும் அவ ருக்கு இருந்திருக்கிறது!


விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத் தான் அவர் இந்திய
நகரங்களுக்கு அறிமுகமானார். அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது, கேக்திரி மன்னர்
தான் 'விவேகானந்தர்' என்ற பெய ரைச் சூட்டினார்!


ராமகிருஷ்ணர் மறைவுக்குப் பிறகு தட்சிணேஸ்வரத்துக்கும் கொல் கத்தாவுக்கும்
இடையே வர நகரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினார். சில நாட்களில் அதைக் காலி
செய்துவிட்டார். 'நிரந்தரமாகத் தங்கினால் அந்த இடத்தின் மீது பற்று
வந்துவிடும்.மூன்று நாட்களுக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது' என்ற
திட்டம்வைத்து இருந்தார்!


கொஞ்சம் அரிசி, சிறிது கீரை, ஒரு துளி உப்பு இவைதான் உணவு. மன்னர்களின்
அரண்மனைகளில் தங்கினாலும் ஆடம்பர உணவைத் தவிர்த்தார்!


ஐந்து ஆண்டு காலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார்.
கையில் காசு இல்லாமல் புறப்பட்டார். யார் பணம் கொடுத்தும் வாங்கவில்லை. மைசூர்
மகாராஜா மொத்தச் செலவையும் ஏற்கிறேன் என்றபோது 'திருச்சூருக்கு டிக்கெட்
எடுத்துக் கொடுத்தால் போதும்' என்று மறுத்துவிட்டார்!


தாஜ்மஹால் அவரது மனம் கவர்ந்த இடம். அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு
மாதங்கள் வேண்டும் என்று சொன்னார்!


'எழுமின்... விழுமின்... குறிக் கோளை அடையக் குன்றாமல் உழைமின்' என்ற
வார்த்தையை முதன்முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம்!


வெற்றிலை, புகையிலை போடுவார். 'ராமகிருஷ்ணருக்கு ஆட்படுமுன் உல்லாசமாக
இருந்தவன். அதன்பின்னும் பழைய பழக்கங்களை என் னால் விட முடியவில்லை. பெரும்
லௌகீக இச்சைகளை எல்லாம் துறந்த பின் இந்த சிறிய விஷயங்கள் இருந்தாலும்
இல்லையென்றாலும் ஒன்றுதான் என்பதால், இவற்றைக் கைவிட முயற்சிக்கவில்லை' என்று
வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்!


புத்தகங்களை அவர் அளவுக்கு வேகமாக யாராலும் வாசிக்க முடியாது. 'வரிவரியாக நான்
படிப்பது இல்லை, வாக்கியம் வாக்கியமாக, பாரா பாராவாகத்தான் படிப்பேன்' என்பார்!


அமெரிக்கா செல்லும் முன் கன்னியாகுமரி வந்தவர், கரையில் நின்று பார்த்தபோது
தெரிந்த பாறைக்கு நீந்தியே போய் தியானம் செய்தார். அதுதான் விவேகானந்தர் பாறை.
அமெரிக்காவில் இருந்து வரும்போது சென்னையில் தங்கிய இடம், கடற்கரைச் சாலையில்
உள்ள விவேகானந்தர் இல்லம்!


தமிழ்நாட்டுக்கு மூன்று முறை வந்திருக்கிறார் விவேகானந்தர். முதலில் மூன்று
மாதங்கள். அடுத்து 20 நாட்கள் தங்கினார். மூன்றாவது முறை வரும்போது அவரை
கப்பலைவிட்டு இறங்கவிடவில்லை. கொல் கத்தாவில் பிளேக் நோய் பரவிய காலம்
என்பதால், இவரைக் கப்பலை விட்டு இறங்க அனுமதிக்கவில்லை!


'நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். அப்படிப் பேசினால் யாராவது
விஷம்வைத்துக் கொன்றுவிடுவார்கள்' என்று மைசூர் மகாராஜா சொன்னபோது, 'நீங்கள்
தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச
முடியும்?' என்று திருப்பிக் கேட்டார்!


'பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப்
பேராபத்து நிகழும்' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன்
சொன்னது அவர்தான்!


அடிமைப்படுத்தி வந்த ஆங்கில அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். 'ஆங்கில
அரசாங்கம் என்னைக் கைது செய்து சுட்டுக் கொல்லட்டும்' என்று வெளிப்படையாகக்
கோரிக்கைவைத்தார்!


விவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. 'சென்னை
இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான்
அடிக்க வேண்டும்' என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும்!


கலிஃபோர்னியாவில் இவர் நடந்து போனபோது துப்பாக்கி பயிற்சி நடந்துகொண்டு
இருந்தது. சுட்டவருக்கு குறி தவறியது. பார்த்துக்கொண்டு இருந்த இவர் வாங்கி...
ஆறு முட்டைகளையும் சரியாகச் சுட்டார். 'துப்பாக்கியை இன்றுதான் முதல்தடவையாகப்
பிடிக்கிறேன். இதற்குப் பயிற்சி தேவையில்லை. மன ஒருமைப்பாடுதான் வேண்டும்'
என்று சொல்லிவிட்டு வந்தார்!


'ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம்
சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத் திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை
கிடையாது' என்று இவர் சொன்ன வார்த்தைகள் சீர்திருத்தவாதிகளையும் திரும்பிப்
பார்க்கவைத்தது!


விவேகானந்தரின் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள்.
அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும்,
உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும்
போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்'!